வியாழன், 8 மார்ச், 2007

காதல் கொடு




காதலிக்கத்தோன்றா பருவத்தில்
கைப்பிடிக்கவேண்டிய கர்மத்தால்
கால் கட்டு வீழ்ந்தது

தேடாமல் கிட்டிய செல்வமவள்
தாகத்திற்கேற்ற நிழலானாள்
வீழ்நதபோது தோள்கொடுக்க

மனதின் கண்ணீர் துடைக்க
மானம் கலையாமல் பார்த்துக்கொள்ள
மனையெல்லாம் அவள் மணம் நிறைந்து நிற்கும்

வெறும் வானில் விடிவெள்ளியாய்
வாழ்வில் விழக்கேற்றி
வாழ்க்கைக் கொளியேற்றினாள்

நான் எழுதும் கிறுக்கல்களின் முதல் வாசகியவள்
நன்கு தெரிந்த்து அவள் மறைந்தபிறகு...
நானில்லா அவளில்லை அதனாலோ முன்னே ஒடிவிட்டாள்

இந்த தள்ளாத காலத்தில் துணையில்லா பறவையாய்
தள்ளாடித் தள்ளாடி மனத் தனிமையில் நான்
சொந்தம் இருக்கிறது மனத்தைச் சொல்ல ஆளில்லை

வாழ்க்கைப்பயணத்தில் நான் ஓட பின்னிருந்தே ஓடியவள்
ஓட்டம் நின்றபோது திரும்பிப்பார்க்கிறேன்
ஓடியவள் தடம் மட்டும் வெறிச்சோடி...

மகனே அறியாமல் இருந்துவிட்டேன்
மகனே நீயிப்போது இளம்பருவம்
மகனே உன் வாழ்வை வாழ வேண்டியபருவம்

நீ பேசிச்சென்றதில் அவளுள்வீழ்ந்த கண்ணீரை நானறிவேன்
நீதான் அவளுக்கு முழு உலகமே அதனாலே கொடு
நீ கொடுப்பது உன்பிள்ளைக்கும் சேர்த்தே கிடைக்கும்

என் தாய் எனக்குத் தந்ததைப் போல
உன் தாய் உனக்குத் தந்ததைப் போல
உன் தாரமும் உன் பிள்ளைக்குக்கொடுப்பாள்

ஆக நிறைய கொடு கொடுப்பதால் குறைவதில்லை
கேட்காமலேயே கொடு அப்படியே திரும்பக்கிடைக்கும்
ஆக நிறைய கொடு காதலை நிறையக்கொடு


வினோத்