வெள்ளி, 11 ஏப்ரல், 2008

தருணம் இது

பல நாட்களுக்கு முன்பு ஞாபகம் என்ற தலைப்பில் எழுதிக்கொண்டிருந்தது.. ஏனோ பல காரணங்களால் நின்று போக.. இதோ இப்போது..

தருணம் இது

ஏளனத்தால் ஏற்பட்ட வைராய்க்கியம்
நண்பன் தோளால் கண்ட நெஞ்சுறுதி
பேசாமல் சொல்லிய காதல்கள்
பேசியே சொல்லாத நட்புகள்

பிரிவோம் எனச்சொன்ன வருத்தங்கள்
புரிந்ததால் இணைந்த மகிழ்ச்சிகள்
காத்திருப்புகள் கரைந்த தருணத்திலும்
கருணைமட்டும் குறையாத கண்கள்

தவறினால் தண்டித்த வசைகள்
பாசத்தால் புகழ்ந்த வார்த்தைகள்
தராசினால் படியளந்து வைத்த குணங்கள்
தரைமட்டமானது சிரிப்பின் அணைப்பில்

தட்டிக்கொடுக்க கைகளும்
தலை சாய்க்க தோளும்
ஆறுதல் பகர உதடுகளும்
சேர்ந்து சாப்பிட வயிறும்
எதுவுமே வேண்டாம் இது
வாழ்வைத்தொடங்கும் காலம் அல்ல

தனிமை நம் தூசகற்றும் நேரம்
தனிமை நம்மை தெளியவைக்கும் நேரம்
தனிமை சிந்தனை சிறப்பாகும் நேரம்
தனிமை இனிதென இருப்போம் சில நேரம்

கவலைகள் நம்மை கலங்காமல்
ஆறுதல் நம்மை அழவைக்காமல்
அன்புக்காக ஏங்கி நிற்காமல்
ஆசைகளை போர்த்திக்கொள்ளாமல்

எழுந்து நில் மலைமேல் நிற்பதை போல்
எதிர்ப்பவைகள் உடைந்து விழும் பொடிபொடிபோல்
சோதிக்க வைத்த காலம் அல்ல இது
சாதிக்கவேண்டிய தருணம் இது



--
இது எல்லா நண்பர்களுக்காகவும்......