சனி, 3 மார்ச், 2007

அடக்கம்



தன்னைத்திரியாக்கி எண்ணமெனும் எண்ணைவிட்டு

உயிரில் செய்யும் வேள்வியில் வெளிவந்ததைக் கொண்டால்
வேழத்தையும் அடக்கலாம் வேதமும் வேண்டா
தவறாகப்புரிந்துகொண்டனரோ............
வீதிவீதியாய் வீடுவீடாய்
வேழம் எடுக்கிறது பிச்சை........

--
வினோத்

கண்ணீர்...


கண்ணில் கண்ணீர்...

நிலை தடுமாறினேன்
ஓடிப்போய் கட்டியணைத்தேன்....
கண்ணில் ஒரு மின்னல் வெட்டம்....
தலை வலித்தது..
தொட்டுப்பார்த்தேன்.
கையில் இரத்தம்...
முன்னிருந்த விநாயகச்சிலையில் கூட
தலையிடித்த இடத்தில் இரத்தம்...

அவர் முகத்திலோ சாந்தம்..

--
வினோத்

நிமிடம்


வாடிய மலர் இதழ்கள்
வற்றிவிட்ட எண்ணையில் எரியும் திரி
பொறியில் அடைபட்ட எலியின் கடைசிப்பார்வை
பல்லியின் வாயில் பச்சைப்புட்டான்
ஊஞ்சல் ஆடிய மரம் அறுபட்டுகிடந்த தருணம்
ஊனத்தால் விளையாட்டிற்கு வராத நண்பன்
பள்ளியில் விட்டு கையசைத்து பெற்றோர் சென்ற தனிமை
பள்ளி விடுமுறையின் கடைசிநாள் தூக்கம்
கடைசியாய் ஒருமுறை திரும்பிப்பார்த்த வாடகை வீடு
ஆசை பிள்ளை முதலில் எதிர்த்துபேசியதால் கொண்ட மௌனம்
அடித்துவிட்டு நோக அழும் பிள்ளையின் ஏக்கக்குரல்
முதலாய் வயதின் பொருளறிந்த நொடி
முதல் கலவி முடிந்ததையுணர்ந்த தன்மை
முதல் கருவை முதலாய் உற்றார் அறிந்த செய்தி
முதலாய் வாழ்க்கைத்துணை தாய்வீட்டிற்கு சென்ற தனிமை
முதாலாய் ஒரு சொந்தத்தை முழுதாய் இழந்துவிட்ட கணம்
ஏக்கமுடன் பிள்ளைவரவைக் காத்திருக்கும் கிழவியின் கண்கள்
ஏதேதோ உணர்த்திச்செல்கிறது வாழ்வின் நிமிடங்களை


--
வினோத்

அது



அழிவில்லை என்றும் அழிவில்லை

அகமாக ஆனவனையறிந்தவற்கு அழிவில்லை
அழியாததொன்றுமில்லா அவனைத்தவிர
அவனாகிய நம் ஆன்மாவைத்தவிர

ஆன்மாவிற்கு வினையில்லை கர்மவினையில்லை
ஆனாலும் அரக்கைத்தொட்ட கைபோல்
மாயாபந்தத்தினால் வினை தொடரும்
ஆன்மாவில் வந்து ஒட்டிக்கொள்ளும்

இப்போதிருப்பது நிஜமல்ல கர்மவினையறுக்க வந்தஇடம்
தற்போதிருப்பதை நீக்கிவிட்டு ஓடுவாரும் உளர்
அப்போதே சேர்த்துவைப்பாரும் உளர்
எப்போதும் நல்வினைசெய்வாரும் உளர்

கொள்வது நம்பிக்கையாம் அது இறைமேலாம்
கொண்டதும் இறைவாராவி்டாலும் மனம் இயங்கிவிடும்
கொண்டது நற்கோணத்திலானால்
கொள்ளவேண்டிய வினைகளை விதைத்துவிடும்

வினையது நம்மனத்தைக் கையிலெடுத்து
வினைகளை தொடரவிடும் மனமும் அதுபோல் எண்ணும்
விடமுடியாமல் புறத்தடிநோக்கி அங்குமிங்கும் ஓடுவர்
அகத்தாலணையும் அகம் அறியாதார்

எல்லாவினையும் நாமறியலாம்
வரும்வினையும் வந்தவினையும் நாமறியலாம்
மூலக்கனல் கொண்டு எவ்வினையையும் பொசுக்கலாம்
மூர்த்தியும் தெளியலாம் பொகுக்கியபின்

பொசுக்கியபின் சித்தம் தெளியவரும்
போக்கும் வரவும் தெளிந்துவிடும்
செய்வதறிந்து செய்தால் வினையொட்டா
செய்வதெல்லாம் நல்வினையாகுமே



வினோத்

விழித்தெழு

விழித்தெழு

மனதை ஆழ்மயக்கத்திலாக்கி தன்

மனத்தின் தேவையெல்லாம் ஓதி
மாயை ஏவப்பட்டவர்களாய் நாம்

அடக்க வந்தவரை அறிந்திலர்
அடங்கியபின்னும் அறிந்திலர்
அடக்கியவர் பின் ஒளியும் கன்றாய் நாம்

கையில் அவருடை அடையாளம்
கழுத்திலும் அவருடை அடையாளம்
காணாமல் கண்டதுபோல் கண்கள்

விழித்தெழுங்கள் விழிகளே
விழித்தெழுங்கள் – இது தூக்கத்தில்
நடக்கும நேரமல்ல

எழுந்து சொல்வோம் விழித்துவிடு – மனதில்
எழும் தீயாக சொல் நான் அடிமையில்லை
எவரேனும் இனிவந்தால் அடக்கிவிடு சொல்லிவை

நம் மனம் நமக்கு மட்டுமே சொந்தம்
ஓடும் உயிரோடையில் நாமும் ஓடவேண்டா
மனம் திரும்புவோம் மனம் தெளிந்து

அடுத்தவர் விளையாட மனம்இது களமல்ல
அகண்ட பிரம்மமதில் நாம் விளையாடி
அகரத்தை பிரம்மமாக்கும் வேள்விக்களம்

வேள்வியில் வெளிவந்ததைக் கொண்டால்
வேழத்தையும் அடக்கலாம் வேதமும் வேண்டா
வேகாமல் அழியுமுன் முக்கண்ணை வேகவை


--

வினோத்

எண்ணம்


என்னைஎன்னவென்று எண்ணாமல்
என்னையெடுத்துரைக்கும் எண்ணமெல்லாம்
ஏனோவென்று எண்ணிய காலங்களில்
ஏனோ எண்ணத்தோன்றவில்லை எண்ணுவதற்கு

என்னை என்னவென்று எண்ணித்தோன்றி
என்னை யெண்ணாமல் இருந்த எண்ணங்களெல்லாம்
எண்ணியெண்ணி எண்ணாமாட்டாத
எண்ணத்தால் அழிந்ததுவே

அழிந்ததும் அழிந்ததா, மெய்யோயென்றிருந்த
அகத்தையும் அழித்து விட்டேயழிந்தது
அகமெல்லாம் வெறுமை நிறைந்தது போல்
அகமும் புறமும் அழிந்ததுபோல் எண்ணம்

எண்ணத் தோன்றவில்லை எண்ணமும் தோன்றவில்லை
எல்லாமே ஓய்ந்தது எண்ணாதிருக்க எண்ணிய நாள்.
எங்கும் நிசப்தம். நிலைத்திருக்க நினைத்தபோது எண்ணித்தொடங்கியிருந்தேன் நான்
மறுபடி

--
வினோத்

நடந்ததெல்லாம்


நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது.
எரிமலைஅனல் நன்மைக்கு?
ஆழியின் சீற்றம் நன்மைக்கு?
அணுகுண்டின் தீவிரவாதம் நன்மைக்கு?
மனதின் மதவாதம் நன்மைக்கு?
ஆம்...அழிக்கவேண்டியவைகளை
அழித்து விட்டால்
நடந்ததெல்லாம் நன்மைக்கு!
நடப்பதுஉம் நன்மைக்கு!?

மந்திரவாதம் மூடம்!
மனவியலும் ஜொதிடமும் மூடம்..
சக்தி செறிவித்தல் அறிவுவாதமாம்.
பிரார்த்திப்பதும் அறிவுவாதமாம்.

அறியாததெல்லாம் மாந்தற்ரு
அறிவிலிகளின் மூடநம்பிக்கை
அறியத்தந்தால் அவர்கள் அறிவாளிகளென்று
அடிபணிந்திடுவர்
அ. அ. என்று கேட்டிருப்பர்
நம்மக்கள் அவர்கள் தம் பேச்சை

ஆத்திரம் அழிப்பதில்லை
ஆத்திரப்படும் உயிர் அழிப்பதுபோல்
அழிந்துவிடுதோ
ஆன்மாவும் அழிவதில்லை
அதையறியா ஆன்மாக்கள்
காலத்தின் ஓட்டத்தில்
கலந்துவிடுமோ

உயிர் உயிரையழிக்கிறது என்றால்
நம்முயிரான இயற்கையும் ஏன் அழிக்கவேண்டும்
அழிக்கத்தெரியும்.
கட்டைளையை நிறைவேற்றிவிடுகிறது
கனகச்சிதமாக.
அடங்கிவிடு என்றால்?...
அடங்குமா அழித்தெறியுமா

எல்லோரும் அக்கரைக்கு படையெடுத்தால்
கடல் என்ன வழிவிடுமா.
கடலிடம் கேட்கவேண்டும்!

மனிதக்கூக்குரல் இயற்கைக்கென்ன
கேட்கவாச்செய்யும்
எறும்பின் கூக்குரல் நமக்கென்ன
கேட்டுக்கொண்டா இருக்கிறது.

அழிந்துபோகட்டும்
அழியவேண்டுபவைகள்
அழியவேண்டாமென்றால்
அழியுமுன் தன்னை தனதாக்கிக்கொள்

சக்தி செறிவித்தல் - Energy Healing.....

--
வினோத்

தொலைவு...


கடலேர மணலில் கன்னியவள் கரம் பிடித்து
கால் புதைய நடப்பதில் விருப்பமில்லை
காலைப்பனி குளித்த வரப்போர நெற்கதிர்
காலைத்தடவ தொழிலுக்குப் போனதும் மறக்கவில்லை

கற்சுமையெடுத்து களைத்துப்போய்
கூழ் குடித்து தன்னையறியாமல் துங்கும் சுகம்
கலவி கொண்டு நரம்பிளைத்து நாமாகத்
காமமயக்கத் தூங்குவதில் கிடைக்கவில்லை

நூல் சுமையை சந்தை மாட்டுவண்டிபின் வைத்து
பலருடன் ஆட்டம் போட்டுவரும் கர்வம்
குளிர் கண்ணாடியினூடே வெளியுலகை
நோட்டமிட்டு பயணிப்பதில் கிட்டவில்லை

எழும்பும் நேரமதை சொல்லிவிட்டு
தூக்கமின்றி தகிக்கும் குளிரறைத்தூக்கமதில்
நடுநிசியில் பேய்மழைத்துளிகளுக்காக
கொஞ்சம் நீங்கிப்படுத்த ஞாபகம்

எல்லாம் இருக்கிறது ஆனால் ஏதோ இன்றில்லை
எதையோ தொலைத்துவிட்ட தேடல்
எல்லாம் அழிந்துபோகும் என்றால் எதற்காக இன்றுவரை
எதற்கும் காரணம் இருக்குமே. இதற்கென்ன காரணமோ..

சொல்லிவிட்டு தொலைக்கும் முயற்சி
சொல்லியவர் இன்றில்லை,
இருப்பவரோ சொல்லவில்லை
சொல்லுவதும் கேட்கவில்லை
சொல்லிப்பயனுமில்லை

தெரிந்தவர் சொல்லுங்கள்.
தேடிவந்து கேட்டிருப்பேன்
தேடுவது கிட்டிவிட்டால்
தேடுவோர்க்கும் கொடுத்திருப்பேன்

--
வினோத்

சில சமயம்.


கண்டவுடன் ஏற்பட்டது அது தெய்வீகக்காதல்!
அடுத்தவளையும் கண்டேன்
ஏற்பட்டது மறுபடியும் தெய்வீகக்காதல்!
நில்! மறுபடியுமா? தெய்வமே.
நல்லவேளை. முதலைத் தொடங்குமுன்னே
நல்லவேளை அடுத்தவளையும் கண்காட்டினாய்
அப்போதெனக்குப்புரிந்தது
இது தெய்வீகக்காதலல்ல.
இது வயநீர் காதல்.

வயநீர் - ஹார்மோன்

வினோத்

இனிமுடியாது


தோளில் துவர்த்திட்டு குளிக்கப் போகும் போதும்
தோதாய் முகத்தில் சாந்திட்டு பொட்டுவைத்து
அவன் ஆளை எதிர்பார்த்து வந்தவனை அவள் வருமுன்னே
தலைசிலுப்பி நெற்றிகலைத்து குளத்தில் தள்ளியது.

மழையா? அம்மா வீட்டு முற்றத்துவழியா
மழைத் தண்ணி ஓடுதம்மா, மண்வெட்டி ஏடு.
மழைமுத்துக்கள் உடல்நனைக்க
மழைநிற்கும் வரை வரப்பு வைக்கும் நான்

குட்டிக்கரண குளியல் இடைவெளியில்
கட்டிய ஒற்றைத்துணியைக்கழற்றி
மீன் பிடிக்கையில் அவளும் குளிக்க வர
மீனோடு ஆற்றில் குதித்தது

ஐஸ். ஐஸ். அன்று எல்லோருக்கும்
என் மண் உண்டியல் உலுக்கி தொளிந்தவற்றில்
எல்லோருக்கும் ஐஸ் வர, சண்டையிட்ட தங்கையிடம்
என் ஜஸை அல்லது காசை திருப்பித்தா கேட்டது.

இவையெல்லம் இனிமுடியாதென்று ஞாபகப்படுத்தியது
இன்று அலுவலக ஜன்னலோரமாய் நிற்க
தள்ளுவண்டிக்காரன் பஞ்சுமிட்டாய்
தள்ளிக்கொண்டு போனதைக் கண்டபோது.

--
வினோத்

தேடிய நாள் முதல்


நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
கண்ணில் காணும் எல்லாமாக
நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
நீயாக அவனாக கல்லாக புல்லாக
நீராக நெறுப்பாக செடியாக கொடியாக
மரமாக காற்றாக நாயாக பாம்பாக
அணிலாக கிளியாக அனைத்துமாக
மாறிக்கொண்டிருக்கிறேன் நான் உனைத்
தேடிய நாள் முதல்
இப்போதெல்லாம் நான் நானாகவே
இருக்க முடிவதில்லை
இனி நான் நானாக மாற வேண்டும்.

--
வினோத்

இதோ வருகிறோம்.


எங்கள் வயிற்றில் பிறப்பவன்
சிங்கத்தை வாட்டப் போகும்
தமிழனென்பதால் அழித்தாயா மூடனே.
இதோ நாங்கள் சூழுரைக்கின்றோம்

நாங்கள் வளர்ந்து வாழ்க்கைப்பட்டு
தாயாக தமிழன் கரு சுமந்து
அவன் பிறந்து உன்னையழிக்க
நெடுகாலம் ஆகுமடா.

நன்று செய்தாய் மூடனே.
இன்றே வருகிறோம்.
தமிழச்சி கருவில் ஆணாக.
தமிழ்தாய் நாட்டையாழ

நாங்கள் வளரும் காலத்தை குறைத்தாயடா
நாட்களை எண்ணிக்கொள்ளடா.
எங்கள் தாயின் உதிரம் குடித்த உனக்கு
எங்கள் கையால் தானடா சாவு.

இது செஞ்சோலை செல்வங்களின் சூழுரை...

--
வினோத்

ரொம்ப பிடிக்கும் எனக்கு


விரும்பி நேசிக்கிறவருக்காக
விரும்பி செய்யும் செயலை
உதாசீனப்படுத்தி பேசிப் போக
இமையோரம் சிலதுளி நீர் வருமே
அது எனக்கு ரொம்ப பிடிக்கும்

இசையில் மயங்கி ஸ்வரங்களிவ் கூத்தாடி
கடல்மேல் தோணி போல் அசைந்தாடி
முடிவில் கண்ணோரம் நீர் வழிவது
ரொம்ப பிடிக்கும் எனக்கு.

நினைத்தது நடக்காமல் கோபப்பட்ட
இறைவனை இனிபார்க்கும் போது நெகிழவைக்கும்
அவன்செயலால் செயலற்று நின்றிருக்க
காண்பவற்றை மறைக்குமே
கண்ணீர்த்துளி
அது ரொம்ப பிடிக்கும் எனக்கு.

ஏனோ தெரியவில்லை,
என்னிடம் இல்லாததெல்லாம் பிடித்துப்போகிறது
எனக்கு.

--
வினோத்

நாளை.


போற்றிப்பாடும் தேவையறிந்து
போற்றினேனே. போற்றிபோற்றி.
மீணடுமென் ஊனக்கண்ணிலொரு ஒளிவட்டம்!
கைய்யேந்தியழைத்தேன், அப்பா...
என்ன கருணையடா உனக்கெனயழுதேன்.
கையில் விழுந்தது என்னவோ.
ஆமது, ஒற்றை வட்டநாணயம்!

எதற்கெடா?
கண்ணிழந்த பாவியெனக்கு நாணயமெதற்கடா.
கூன்நரைகாலத்தில் இதற்காகவோ
காலுமில்லாபாவிநான் உன்மலரடிநோக்கிதவழ்ந்தேன் ?

ஊன்வளர்க்க உணவுவேண்டேன்
பொருள்வளர்க்க வலிவுவேண்டேன்
பேர்வளர்க்க பிள்ளைவேண்டேன்
தானம்வளர்க்க தனம்வேண்டேன்
யார்க்குவேண்டாதவனெனக்கு நீதானடா வேண்டும்.
ஆமப்பா. உன்தாழ்மட்டுமடா.
உன்தாழ்மட்டும்போதுமடா.

--
வினோத்

என்னவள்.

என்னவள்.

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவள் என்னை காதலிக்கிறாளா என அறிய வேண்டும்.
என்ன பண்ணலாம்? நேராகச்சென்று பேசிவிடலாமா? இல்லை மெயில் பண்ணலாமா? ஒன்றுமே
தோன்றவில்லை. வெறுப்பாய் இருந்தது. இந்த இடத்தில் எப்படி இருக்க? எந்திர உலகம்.
அவரவர் பாட்டுக்கு எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். யாரிடம் கேட்க?
அடிக்கடி அவள் வருவாள். கேட்டுவிடலாமா என்று தோன்றும். அதோ அவள் வருகிறாள்.
அவளேதான். என்னைப்பார்த்துதான் வருகிறாள். எனக்குத்தெரியும். வந்துவிட்டாள்.
இல்லையில்லை. என்னிடம் வரவில்லை. பக்கத்தில் இருந்தவரிடம் வந்தாள். பேசினாள்.
"என்ன சார், இன்னிக்கு உங்க ஆளு கனவில வந்தாங்களா? இந்தா, இத சாப்பிட்டுட்டு
படுங்க. கனவில உங்க ஆளு கண்டிப்பாக வருவாங்க." என்று ஏதோ கொஞ்சம் மருந்தை அவர்
வாயில் விட்டுவிட்டு மருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தாள். "அப்பப்பா,
இந்த பைத்தியங்ககிட்ட பேசி மருந்து கொடுத்து முடியுமுன்ன எனக்கு பைத்தியம்
பிடிக்கும் போல இருக்கு" பேசிக்கொண்டே போய்க்கொண்டிருந்தாள்
என்னவள்..........

சும்மா.......... நேரம் போகல. அதான்............ ;);)

ஞாபகம்.

ஞாபகம்.

சின்ன வயது ஞாபகம். ஆற்றங்கரை மணலில் வீடுகட்டிய ஞாபகம். ஓடியாடி அந்த
வீட்டில் ஒருயுகம் வாழ்ந்துவிட்டு, வீட்டை கலைத்து கோவில்கட்டி பக்கத்து வீட்டு
செம்பருத்தி பூவெல்லாம் பறித்து சாமிகும்பிட்டு, ஆற்றுநீரில் பன்னீர்தளித்து,
பிரசாதமாய் நறுக்கிய கொய்யாகாய் சாப்பிட்டு பக்கத்து தாத்தா தோட்டத்து
செடியெல்லாம் பிடிங்கி சாமியாடி, பூவரசஇலையில் செய்த பீப்பீ வைத்து
கொல்லாக்கிளையில் டெல்லிக்கும், பாம்பேக்கும் வண்டி ஓட்டி வண்டி மிக வேகமாக
போய்க்கொண்டிருக்கும் போது "மோனே.....,மோனே....." அடம்பிடித்த என்னை
அத்தைவீட்டுக்கு கூட்டிப்போவதாக சொல்லி குளிப்பாட்டி, நல்ல மணமான சட்டை போட்டு
தலைவாரி தாத்தா பக்கத்துல உக்காந்துக்கோ கண்ணா.. என்று சொல்லிச்சென்ற அம்மா
திண்ணையில் நின்று கூப்பிடுவாள் .

ஆமாம். இப்ப எதுக்கு இந்த ஞாபகம் என்று கேட்கிறீர்களா?

அம்மா கூப்பிட்டதும் ஓடுவேன் வீட்டுக்கு. தலை, முகமெல்லாம் மண்ணாய் கையில்
கோவில் சாமிக்க வாளுடன் அம்மா முன்னாடி போய் நின்று "யாம்மா?" என்று கேட்கும்
போது என்னைப்பார்த்த அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும்.