
அரசு மது விற்பனை கோடி தாண்டி
தினச்செய்தி முதல் செய்தி
தரகு அமைச்சர் சிரிப்பில் கன்னக்குழி
சாலைக் குழிகளில் மூக்கற்றம்
மூழ்கி மதுவங்கியில் கூலிசேமித்து
தினக்கூலி உழவன்!
பல நூறு ஏக்கர் முதலாளிக்கு
இலவச மின்சாரம்
ஓட்டைக்கூரை நிலவொளியில்
நாளைக்கான வேலை ஓட்டத்தில்
தினக்கூலி உழவன்!
தமிழர் குருதி குடித்த தமிழ்ஈன தலை
தமிழ் மாநாட்டில் இரத்தப்பற்களில் சிரிப்பு
தமிழ்த்தாயின் குற்றுயிர் குருதியில்
தினக்கூலி உழவன்!
பண்ணை உழவு வண்டியில்
வண்ணத் தீட்டு
காய்ந்த புல்லுடன்
உழவு இழந்த மாடுகளுமாய்
தினக்கூலி உழவன்!
ஓசோனில் ஓட்டை
ஓராயிரம் கோடியில் திட்டம்
வயல் வரப்பில்
இரண்டு கால் கொக்காய்
தினக்கூலி உழவன்!
உழுதுண்டு வாழத்தான் ஆசை
பழுதுண்டு போனது வயல் - இனி
அழுதுண்டு வாழப்பழகி
தினக்கூலி உழவன்!
மீண்டும் ஒரு உழவர் தினம்
மோகம் மீட்டி இலவசத் தொல்லை
காட்டியில் நடிகை சிணுங்கலில் மூழ்கி
தினக்கூலி உழவன்!
புதுப்பானை கரும்பு மஞ்சள்
கைக்குத்தல் புத்தரிசி போய்
மின்சார அடுப்பில் வீட்டுக்குள்
பொங்குது பொங்கல்
நன்றி மறப்பினும் நன்றி மறவா
கதிரவன் தன் கடமையில்
மாற்றாந்தாய் மொழியில் வாழ்த்திய
தமிழ் மறந்த பிள்ளை மேல்
அன்புக்கனல் வீசும் சுட்டெரிப்பில்
மீண்டும் ஒரு உழவர் தினம்