என் முதல் காதல் கவிதை
ஓருயிராய் உடல் வாழ இருகண்களில்
ஈருயிராய் உனைக் கண்டேன் உன்
காதல்உயிர் உதரம் பாய்ந்தது கண்டேன்
பாதிஉயிர் இழந்து நின்றேன் உன்அழகில்
கடலினாழம் கண்ணில் சீரியஒழுக்கம் செயலில்
பனிக்குளுமை பேச்சில் சூரியஒளி அறிவில்
பிரபஞ்ச சாந்தம் மனதில் சத்தியஉறுதி நெஞ்சில்
நீயென் ஸ்வரமாய் மனசின் லயமாய்
உயிரென் ஸ்ருதியாய் அழகின் விருந்தாய்
புன்சிரியின் பூமழையாய் கண்கனவின் பொன்நிறமாய்
பூயிதழ்பனி எழுப்பும் வசந்த வெயிலானாய்
அக்னி சாட்ஷியாய் கைப்பிடித்த நிமிடத்தில்
பிரியாதிருக்க துடித்த கைகளில் ஹோமகுண்ட வெப்பம்
எனக்காக நானும் உனக்காக நானுமென என்னில்
காதல் விளக்கேற்றி தனிமை சாபவிமோசன தேவியானாய்
மலரின் மெல்லிழையாள் நெஞ்சோடு அணைத்து
தலைகோதி நெற்றி முகர்ததில் மின்சாரம் உடல்பாய
மஞ்சள்முகம் செந்தாமரையாய் சிவந்து போக
என்முகம் நெஞ்சில் வாங்கி கண்மூடிநீ
யுகங்களை விழுங்கும் உன்னோடிருந்த நொடிகளில்
ஓர்மழையில் இருகுடைகளாய் நனைந்தோம்
நெஞ்சங்கனிந்த நின்காதல் மொழியில்நான் நெஞ்சமலர்வேன்
இரவேழும் என்உயிர் சேர்ந்த நெஞ்சம்
உலகேழும் எனைக்காணா அலையுமுன் நெஞ்சம்
கணமேழும் விழிவழிநோக்கி காத்திருந்த கண்ணில்
கண்ணீரெழ கண்டதும் என் நெஞ்சம் நனைத்தாய்
கருவுற்றதறிந்து ஓடோடிவந்து ஒவ்வொன்றும் பார்த்துசெய்து
என்முகம் காண ஏங்கவைத்து என்கைபிடித்து வலியில்
மறுபடிபிறந்து காதல் பரிசுஎன் கையளித்தாய்
தாயுன் அன்பிற்கேங்கி தெய்வமே நம்பிள்ளையாய்
தாயுன் அன்பை பகிரமுடியா நானுமொரு பிள்ளையாய்
நம்மிரு கைவெப்பத்தின் நடுவே தாலாட்டி தூங்கினோம்
ஊடலில் பேசாமல் இருந்த நொடிகளில்
தொட்டில் பிள்ளை ஏங்கியழுத கீச்சுக்குரலில்
மாரோடணைக்க முந்திநம் காதல்கடமை செய்தோம்
பிஞ்சுவிரல் ஸ்பரிசத்தில் பிள்ளைமொழி படித்தோம்
உரித்து வைத்திருக்கிறான் அம்மா அப்பாவை
உற்றார் பேச்சில் உளம் மலர்ந்தோம்
பேச்சுகேட்கா பிள்ளையடித்து வலியில்அழ அழுதோம்
”பெற்ற புண்ணியர் யாரோ” ஊர்புகழ அழுதோம்
பூயிட்டு மணமுடித்து மனமார வாழ்த்தி அழுதோம்
நரை தோன்றி வயதுரைக்க நீகேலி.செய்தாய்
நகை தோன்ற, உனைப்பிரியும்நாள் நினைத்துவாட
”தனியே தவிக்க விட்டு போயிடாதீங்க”
உன் பேச்சில் நம் கண்ணில் கண்ணீர்
கண்எட்டும் தூரத்தில் நீ வேண்டும்
கையெட்டும் தூத்தில் உன்நிழல் வேண்டும்
மூச்சுஎட்டும் தூரத்தில் உன்மனம் வேண்டும்
மனமெட்டும் தூரத்தில் உன்உயிர் வேண்டும்
கனவாய் ஒருகாதல் வாழ்க்கை
கலையாமல் ஓர்யுகம் வாழ உனைக்
காணாமல் தவித்து தேடுகிறேன்
கண்டால் நான் கேட்பேன், என்னை
கைப்பிடித்து காதலிக்க உனக்கு சம்மதமா?
வினோத் கன்னியாகுமரி