சனி, 3 மார்ச், 2007

தொலைவு...


கடலேர மணலில் கன்னியவள் கரம் பிடித்து
கால் புதைய நடப்பதில் விருப்பமில்லை
காலைப்பனி குளித்த வரப்போர நெற்கதிர்
காலைத்தடவ தொழிலுக்குப் போனதும் மறக்கவில்லை

கற்சுமையெடுத்து களைத்துப்போய்
கூழ் குடித்து தன்னையறியாமல் துங்கும் சுகம்
கலவி கொண்டு நரம்பிளைத்து நாமாகத்
காமமயக்கத் தூங்குவதில் கிடைக்கவில்லை

நூல் சுமையை சந்தை மாட்டுவண்டிபின் வைத்து
பலருடன் ஆட்டம் போட்டுவரும் கர்வம்
குளிர் கண்ணாடியினூடே வெளியுலகை
நோட்டமிட்டு பயணிப்பதில் கிட்டவில்லை

எழும்பும் நேரமதை சொல்லிவிட்டு
தூக்கமின்றி தகிக்கும் குளிரறைத்தூக்கமதில்
நடுநிசியில் பேய்மழைத்துளிகளுக்காக
கொஞ்சம் நீங்கிப்படுத்த ஞாபகம்

எல்லாம் இருக்கிறது ஆனால் ஏதோ இன்றில்லை
எதையோ தொலைத்துவிட்ட தேடல்
எல்லாம் அழிந்துபோகும் என்றால் எதற்காக இன்றுவரை
எதற்கும் காரணம் இருக்குமே. இதற்கென்ன காரணமோ..

சொல்லிவிட்டு தொலைக்கும் முயற்சி
சொல்லியவர் இன்றில்லை,
இருப்பவரோ சொல்லவில்லை
சொல்லுவதும் கேட்கவில்லை
சொல்லிப்பயனுமில்லை

தெரிந்தவர் சொல்லுங்கள்.
தேடிவந்து கேட்டிருப்பேன்
தேடுவது கிட்டிவிட்டால்
தேடுவோர்க்கும் கொடுத்திருப்பேன்

--
வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக